Breaking News
வார்தா புயலால் சேதம் அடைந்த வண்டலூர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட 28-ந் தேதி வரை தடை

வார்தா புயலால் சேதம் அடைந்த வண்டலூர் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட 28-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வார்தா புயலால் சேதம்

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்கா சுமார் 1,486 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகள் உள்பட மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன. இயற்கை வனத்தால் சூழப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன.

கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வார்தா புயலில் வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் இருப்பிடங்கள், பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்த ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன.

பூங்காவில் இருந்த பல அரியவகை மரங்களும் விழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி தமிழக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் பூங்காவிற்கு நேரில் சென்று புயலில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு விழுந்த மரங்களை விரைவாக அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

சீரமைப்பு பணி

ஆனால் விலங்குகளின் இருப்பிடங்கள் மீது விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலைகளின் இருபுறங்களில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

வெட்டி அகற்றப்பட்ட மரங்களின் கிளைகள் அப்படியே பூங்கா சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளைப்புலி, சிங்கம், சிறுத்தை, காட்டுமாடு, காட்டுக்கழுதை போன்ற விலங்குகள் உள்ள இருப்பிடங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. வெள்ளைப்புலி இருப்பிடத்தை சுற்றியுள்ள முள்வேலிகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

ஆனால் பாம்பு இல்லம், நீர்யானை, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு, முதலைகள் ஆகியவற்றின் இருப்பிடங்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெறவில்லை, மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பணிகளும் இன்னும் தொடங்கவில்லை, இதனால் பூங்காவை முழுமையாக சீரமைக்க நீண்ட காலம் ஆகலாம் என தெரிகிறது.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

28-ந் தேதி வரை தடை

கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வார்தா புயலால் வண்டலூர் பூங்கா முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதன் காரணமாக பூங்கா நேற்று வரை பார்வையாளர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த தடை வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர் களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. முக்கிய விலங்குகள் இருப்பிடங்களின் மீது விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

பார்வையாளர்களின் தேவையான கழிப்பறை, ஓய்வு கூடம் ஆகியவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இன்னும் ஒரு வாரத்தில் பார்வையாளர்கள் பூங்காவை சுற்றி பார்க்கும் அளவில் சீரமைத்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.