அமெரிக்காவில் பரபரப்பு டிரம்ப் மகளுடன் மோதியவர், விமானத்தில் இருந்து வெளியேற்றம்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் (வயது 35). முன்னாள் மாடல் அழகி. இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஹவாய் தீவுக்கு குடும்பத்துடன் செல்ல முடிவு எடுத்தார்.
அங்கு செல்லும் வழியில், நியூயார்க் நகரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகரத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஜெட் புளூ ஏர்வேஸ் கார்ப்பரேஷனின் விமானத்தில் ஏறி, குடும்பத்துடன் அமர்ந்தார். விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.
அப்போது அந்த விமானத்தில் ஏறிய ஒரு பயணி, விமானத்தில் இவான்கா டிரம்ப் ஏறி அமர்ந்திருப்பதை பார்த்த உடனே, கோபம் அடைந்து அவருடன் மோதினார். இதையடுத்து அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை. ஆனால் அவர் இவான்கா டிரம்புடன் மோதல் போக்கை கையாளுவதைப் பார்த்த விமான சிப்பந்தி ஒருவர், அவரிடம் சென்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர், “அவர்கள் நமது நாட்டை அழிக்கின்றனர். இப்போது நமது விமானத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் பற்றி விமான நிறுவனம் மேலும் கூறுகையில், “அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றும் முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. அந்தப் பயணிக்கு அடுத்த விமானத்தில் இருக்கை ஒதுக்க மாற்று ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவித்தது.