Breaking News
ட்ரம்பை தோற்கடித்து இருப்பேன்! – ஒபாமா

அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்திருந்தால் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து இருப்பேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியில் ஒருவருக்கு மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அதிக பட்சமாக இரண்டு தடவைகள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிப் பெற முடியும்.

ஒபாமா 2008 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கய்னை தோற்கடித்து அதிபர் ஆனார். 2012ல் மீண்டும் போட்டியிட்ட அவர், மிட் ராம்னியை தோற்கடித்தார். மூன்றாவது தடவை போட்டியிட சட்டத்தில் இடமில்லை. அதைக் குறிப்பிட்டு கூறிய ஒபாமா, இந்த தடவை அனுமதிக்கப்பட்டிருந்தால், டொனால்ட் ட்ரம்பையும் தேர்தலில் வீழ்த்தி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

ஹிலரி க்ளிண்டன் குழுவினரின் மெத்தனப் போக்கு…

மேலும் அவர் கூறுகையில், ‘ஹிலரி க்ளிண்டனின் தேர்தல் குழுவினர், வெற்றி பெற்று விட்டதைப் போலவே நடந்து கொண்டனர். வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பி விட்டதால், அடிமட்டத்தில் செய்யவேண்டிய பணிகளை சரிவரச் செய்யவில்லை. ஜனநாயகக் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

தவிர, ஹிலரி பல்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டார். ஹிலரியின் தோல்வி

என்னுடைய எட்டாண்டு ஆட்சிக்கு எதிரானது அல்ல. ஹிலரி தேர்தல் குழுவினர் சரிவரச் செய்யாத தேர்தல் பணியும், ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறையும்தான் தோல்விக்குக் காரணம்,’ என்று ஒபாமா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஜனநாயகக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒபாமாகேர் திட்டத்தால் பலனடைந்தவர்கள் ட்ரம்புக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களைக் நம் பக்கம் கவர்வதற்கு ஜனநாயக் கட்சி தவறி விட்டது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும், புதிய தலைவர்களை உருவாக்குவதிலும் ஒபாமா கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

ஒபாமா என்னிடம் தோற்றிருப்பார்… – ட்ரம்ப் சவால்

ஒபாமாவின் கருத்துக்கு சுடச்சுட ட்விட்டரில் பதிலளித்துள்ளார் ட்ரம்ப். வெற்றி பெற்றிருப்பேன் என்றுதான் ஒபாமா சொல்வார். ஆனால் அவர் என்னிடம் தோற்றுப் போயிருப்பார். வெளி நாடுகளுக்கு செல்லும் வேலைவாய்ப்புகள், ஐஎஸ்ஐஎஸ், ஒபாமாகேர் என பல வகைகளிலும் அவரை மக்கள் புறக்கணித்து இருப்பார்கள் என்று ட்ரமொ ட்விட்டியுள்ளார்.

ஒபாமா கேர் திட்டத்திற்கு மூடுவிழா காண்பதற்கும் ட்ரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். ஒபாமா சகாப்தம் என்று ஒன்று இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினரும் தீயாக வேலை செய்கிறார்கள்.

பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை நல்வழியில் திருப்பி, தொடர்ந்து வெற்றி நடைபோட வேண்டிய நேரத்தில், ட்ரம்பின் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ ரீதியான முடிவுகள் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று ஒபாமா அஞ்சுவதாகத் தெரிகிறது.

செனட்டிலும், காங்கிரஸ் சபையிலும் குடியரசுக் கட்சி மெஜாரிட்டி பெற்றுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. 2018ல் வரும் இடைத்தேர்தலில், கூடுதல் செனட் உறுப்பினர்களைப் பெற்று மெஜாரிட்டி ஆகுவதற்கு ஒபாமா தேர்தல் பணியாற்றுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.