Breaking News
அத்துமீறி வந்து மீன் பிடித்ததாக கைதான 51 பேர் விடுதலை தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க பரிசீலனை; இலங்கை அரசு அறிவிப்பு

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்களின் படகுகள்
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 114 படகுகளை இலங்கை அரசு சமீபத்தில் நாட்டுடமை ஆக்கியது. இது தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மந்திரிகள் பேச்சுவார்த்தை
இந்த நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு நாட்டு மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய குழுவினர் விவசாய மந்திரி ராதா மோகன் சிங் தலைமையில் கலந்து கொண்டனர். இலங்கை குழுவுக்கு அந்த நாட்டின் மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீரா தலைமை தாங்கினார்.

மீனவர்கள் விடுதலை
தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களை விடுதலை செய்யுமாறும், தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்குமாறும் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் வற்புறுத்தப்பட்டது.அதை ஏற்றுக்கொண்ட இலங்கை குழுவினர், மீனவர்கள் 51 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். அத்துடன், தங்கள் வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்கள்.

கூட்டு ரோந்துப்பணி
கைது செய்யப்படும் மீனவர்களை இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்படைப்பது தொடர்பாக நிலையான நடைமுறை ஒன்றை வகுப்பது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மீனவர்கள் பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கூட்டு ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவது என்றும், இரு தரப்பு கடலோர காவல் படையினரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்து பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மீனவர்கள் கைது செய்யப்படும் போது உயிரிழப்பு ஏற்படுவதையும், காயம் அடைவதையும் தடுக்க உறுதி மேற்கொள்ளப்பட்டதுடன், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மீன்பிடி படகுகளை கண்காணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இழுவலைகள்
இழுவலைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இலங்கை தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதற்கு, அதை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய கூட்டு நடவடிக்கை குழுவின் அடுத்த கூட்டத்தை வருகிற ஏப்ரல் மாதம் கொழும்பு நகரில் கூட்டுவது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் அதுபற்றிய விவரங்களை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் விளக்கி கூறினார்.

நன்றி :தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.