Breaking News
புத்தாண்டு கொண்டாட்டம் : “ஒரே நாளில் 120 விபத்துகள்”

புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமர்சையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல… புத்தாண்டு பிறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே.. நமது நாட்டு மக்கள் கொண்டாடத் தயாராகிவிடுகிறார்கள். இது, உண்மையில் நல்ல விஷயமே. ஆனால், அந்தக் கொண்டாட்டம் வெகு சிலரால், அதுவும் இன்றைய இளைஞர்களால் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது என்பதும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு நாள் இரவு, வண்ணமய கொண்டாட்டம் பலரின் வாழ்க்கையை இருட்டாக்கிவிடுகிறது. இந்தப் புத்தாண்டை வரவேற்பதற்காக, நமது சந்தோஷத்துக்காகச் சென்னையில் சிலரைப் பலி வாங்கியும், 100-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் அனுமதித்தும் இருக்கிறோம். ஆம், இது உண்மை!

மது போதையும்… டூவீலர் வேதனையும்!

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வண்ணவண்ண வாணவேடிக்கைகள், பளிச்சிடும் மின்விளக்குகள், ‘மக்களின் ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்கள் என்பதையும் மீறி, ‘டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது’ என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன. தார்ச்சாலையில் நெருப்புப் பறக்க… பைக் ஸ்டாண்டுகளை உரசியவாறு, விண்ணைக் கிழிக்கும் சைலன்சர் சத்தத்துடன் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மதுபோதையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது ‘கெத்’ என நினைக்கிறார்கள். ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. மதுபோதையில் இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள், புத்தாண்டைக் குடும்பத்தோடுக் கொண்டாட வருபவர்களை ஆபத்தில் சிக்கவைத்துவிடுகின்றன. புத்தாண்டு பிறக்கும் இரவில்… எல்லாச் சாலைகளிலும் குறிப்பாக, சென்னையில் உள்ள மெரினா, வாலாஜா, அண்ணா, பழைய மகாபலிபுரம், கடற்கரை போன்ற சாலைகளில் பொதுமக்கள் செல்லவே பயப்படும் அளவுக்கு இந்த பைக் சாகசங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த புத்தாண்டின்போது… சென்னையில் நான்கு இளைஞர்கள் பைக் சாகசத்தில் இறந்துபோயினர். அதுமட்டுமல்லாமல் 120-க்கும் அதிகமானோர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுதவிர, 140-க்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்தேறியுள்ளன. இவை அனைத்தும் அந்தப் புத்தாண்டு பிறந்த ஒரே இரவில்! இதில், சோகச் செய்தி என்ன தெரியுமா? பைக் சாகசத்தில் ஈடுபடாமல்… சாலையின் ஓரத்தில் தன் குடும்பத்தினருடன் பைக்கில் சென்றவர்களும், நடைபாதைவாசிகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதை தலைக்கேறி இளைஞர்கள் செய்த சாகசங்களால் ஏற்பட்ட விபத்தில் இவர்களும் சிக்கிக்கொண்டனர். ‘‘புத்தாண்டை, அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சாகச இளைஞர்கள் நினைத்து மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இதுபோன்று போதையில் சாசகம் செய்யும் இளைஞர்களைப் போலீஸார் பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்’’ என்று கோரிக்கைவைக்கின்றனர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.

ஹோட்டல்களின் புத்தாண்டு நிகழ்வுகள்!

பொதுவாக சென்னையில் இயங்கும் பல நிறுவனங்கள்… புத்தாண்டு பிறக்கும் இரவுப்பொழுதை… பாட்டு, நடனம், விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் கொண்டாடி மகிழ்கின்றன. இப்படி நடக்கும் அந்த நிகழ்வில், மது வகைகளும் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும். சாதாரண சனிக்கிழமைகளிலேயே மது மற்றும் விருந்துகளுடன் கொண்டாடி மகிழும் சில நிறுவன ஊழியர்கள், அதுவும் புத்தாண்டு பிறந்த சனிக்கிழமை இரவு என்றால் சொல்லவா வேண்டும்? நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டையொட்டி, அநாகரிகமானச் செயல்கள் நடக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காவல் துறை தடை விதித்திருந்தனர். ஆனால், அதையும் மீறிப் பல ஹோட்டல்களில் மது கலாசார விழாக்களும், இரவுநேர நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ‘‘காவல் துறையினரின் உத்தரவையும் மீறி இதுபோன்று நடத்தும் ஹோட்டல்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும்’’ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் குரல்களாக இருக்கிறது.

மது விற்பனையும்… கோஷ்டி மோதல்களும்!

தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சராசரியாக ஒருநாளைக்கு 60-லிருந்து 70 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. விடுமுறை நாட்களில் 75-லிருந்து 90 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. இதுவே, பண்டிகைக் காலம் என்றால்… 150-லிருந்து 170 கோடி ரூபாய் வரை வருமானமாகத் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. ஆனால், புத்தாண்டு பிறந்த கடந்த சனிக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் 180 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி மது போதையால் சென்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களில் 25 பேர் கத்திக்குத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். அத்துடன் தமிழகத்திலும் பல கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ‘‘பணப் பிரச்னை அதிகம் உள்ளபோதிலும் புத்தாண்டையொட்டி மது விற்பனை அதிகரித்திருக்கிறது. இதனால்தான் ஆங்காங்கே கோஷ்டிப்பூசல்களும் ஏற்பட்டுள்ளன. முற்றிலும் டாஸ்மாக்கை ஒழிக்காதவரை இதுபோன்ற சம்பவங்களை நிறுத்தமுடியாது’’ என்று வேதனைப்படுகின்றனர் பொதுமக்கள்.

புத்தாண்டை, ‘விபத்து’ ஆண்டாகத் தொடங்கியிருக்கிறது ‘போதை’!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.