திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. திமுக பொதுக்குழு முதல் முறையாக கருணாநிதி பங்கேற்காமல் கூடியது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டமானது தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மற்றும் பிற தலைவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
செயல் தலைவர்
பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மு.க. ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பொருளார் பதவியிலும் மு.க. ஸ்டாலின் நீடிக்கிறார். க. அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். மு.க.ஸ்டாலின் செயல் தலைராக அறிவிக்கப்பட்டதும் பொதுக்குழு கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினர். திமுகவின் விதி 18-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு செயல் தலைவர் பதவியானது கொண்டு வரப்பட்டு உள்ளது. விதியின்படி தலைவருக்கான அனைத்து அதிகாரமும் செயல் தலைவருக்கும் உண்டு.