தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
பொதுநல வழக்கு
பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், பொதுநல வழக்குகளுக்கான தமிழக மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
விவசாயம் பாதிப்பு
தமிழகத்தில் சமீப காலமாக விவசாயிகள் தற்கொலை செய்வது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சில மாவட்டங்களில் உள்ள விவசாய தொழிலாளர்கள், வேறு மாவட்டத்துக்கு வேலை தேடி செல்லும் நிலை உள்ளது.
விவசாயத்துக்காக வாங்கிய கடனை விவசாயிகளால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இத்தகைய தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்றன.
தற்கொலைகள்
கடந்த இரண்டு மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று செய்திகள் வந்துள்ளன. இவற்றில் 7 பேர் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
வேளாண் துறையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தவறுவதால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகின்றன. அதை தொடர்ந்து தற்கொலைகளும் நடக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையினால் பயிர்கள் கருகி விடுகின்றன. இதனால், வருமானம் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தொழில்நுட்பம்
பருவ மழைகள் பொய்த்துப்போனால், தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை செழிக்க வைக்க முடியும். உதாரணத்துக்கு சிறிய நாடான இஸ்ரேல், விவசாய தொழிலில் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறது. அதனால், அந்த நாட்டில் விவசாயம் செழிக்கிறது. விவசாயிகள் பொருளாதாரத்தில் முன்னேறி வசதியாக வாழ்கின்றனர். இந்தியா என்பது மிகப்பெரிய நாடு. ஆனால், இஸ்ரேலை போல தொழில் நுட்பத்தை விவசாயத் தொழிலில் புகுத்தாததால், விவசாயம் அழிந்து வருகிறது.
எனவே, இஸ்ரேலை போல வறட்சியான காலங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய தொழிலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதை செய்ய தவறினால், நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் விவசாயத்தொழில் முற்றிலும் அழிந்துவிடும்.
விழிப்புணர்வு
எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து தகுந்த நிவாரணம் வழங்கப்படவேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். பருவ மழை தவறினால், பயிர்களை காப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் மேம்பாட்டிற்கான நவீன தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சொட்டு நீர் பாசனம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த முறையை பின்பற்ற விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18–ந்தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவை அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
என்ன நடவடிக்கை?
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த தற்கொலையை தடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசு மேற்கொள்ளவேண்டிய பணிகளை எல்லாம் இந்த ஐகோர்ட்டு எப்படி கண்காணிக்க முடியும்? மக்கள் தான் ஓட்டு போட்டு தாங்கள் விரும்பும் அரசை உருவாக்குகின்றனர். ஆனால், பிரச்சினை என்று வரும்போது அரசை அணுகாமல், இந்த ஐகோர்ட்டினை அணுகினால் என்ன செய்வது?’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 14–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
இதற்கிடையே தேசிய மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. 106 விவசாயிகள் இறந்துள்ளதாக வந்த பத்திரிகை செய்தி அடிப்படையில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.
நன்றி : தினத்தந்தி