புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாலியல் கொடுமை:நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது நடிகை மஞ்சுவாரியார் கண்டனம்
பெங்களூருவில் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 6 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மேலும் கடந்த 1-ந் தேதி அதிகாலையில் கம்மன ஹள்ளி 5-வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெங்களூரு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் இது வரை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இளம்பெண்ணை மானபங்கம் செய்த காமிரா காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இதற்கு நாடு முழுவதும் உள்ள சமுக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-
பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு பெங்களூரு நகரம் காரணமல்ல. இச் சமூகத்தின் மீது சமூக அக்கறை இல்லாததே காரணமாகும். இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் நமக்கு இத்தகைய சம்பவங்கள் ஆறாத காயத்தை ஏற்படுத்துகிறது. நாட்டுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தி விட்டது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
நன்றி : தினத்தந்தி