Breaking News
மோகன்லால், பிருதிவிராஜ் படங்கள் முடங்கின மலையாள பட உலகில் 23 நாட்களாக நீடிக்கும் வேலை நிறுத்தம் விஜய், சூர்யா படங்கள் வெளியாகுமா?

மலையாள பட உலகில் தயாரிப்பாளர்கள், திரையங்கு உரிமையாளர்கள் மோதலால் வேலை நிறுத்தம் 23–வது நாளாக நீடிக்கிறது. இதனால் மோகன்லால், துல்கர்சல்மான், பிரிதிவிராஜ் படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. விஜய், சூர்யா படங்கள் அங்கு வெளியாகுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

பங்கு பிரிப்பு
மலையாள பட உலகில் தற்போது, படங்கள் திரைக்கு வரும்போது அவற்றின் வசூலில் 60 சதவீதத்தை தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் எடுத்துக்கொண்டு 40 சதவீதத்தை திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். அந்த தொகை போதாது என்றும் தங்களுக்கு வசூலில் 50 சதவீதம் வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதற்கு தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் சம்மதிக்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை புதிய படங்களை திரையிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதியில் இருந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படங்கள் முடக்கம்
இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த மோகன்லாலின் ‘முந்திரி வள்ளிகள் தளிர்க்கும்போல்,’ மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஜேமோண்டே சுவிசே‌ஷங்கள்,’ பிரிதிவிராஜ் நடித்துள்ள ‘எஸ்றா’ ஆகிய படங்கள் முடங்கி உள்ளன. ஜெயசூர்யா நடித்த பக்ரி படமும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்து, திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக இருந்ததால் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர் நடித்து வருகிற 12–ந்தேதி திரைக்கு வர உள்ள ‘பைரவா’ படத்தை கேரளாவில் 75 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

விஜய்–சூர்யா
இதுபோல் சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் 3–ம் பாகமான சி–3 படத்தையும் வருகிற 26–ந்தேதி கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. போராட்டம் காரணமாக இந்த 2 படங்களும் அங்கு வெளியாவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

பைரவா படத்தை திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் எதிர்ப்பை மீறி திரையிட முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் 12–ந்தேதி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டாக உடையும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கேரளா முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.