Breaking News
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி கோரி ஆண்டர்சன் சிக்சர் மழை

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கோரி ஆண்டர்சன் 10 சிக்சர்கள் விளாசினார்.

20 ஓவர் கிரிக்கெட்
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கனுய் நகரில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மோர்தாசா முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி களம் புகுந்த நியூசிலாந்துக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. ஜேம்ஸ் நீ‌ஷம் 15 ரன்னிலும், முந்தைய ஆட்டத்தில் சதம் கண்ட காலின் முன்ரோ ரன் ஏதும் எடுக்காமலும், டாம் புருஸ் 5 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். அப்போது நியூசிலாந்து 41 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (6.1 ஓவர்) இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆண்டர்சன் மிரட்டல்
இந்த சூழலில் கேப்டன் கனே வில்லியம்சனும், ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சனும் கைகோர்த்தனர். சில ஓவர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் 10 ஓவர்களுக்கு பிறகு அதிரடி வேட்டையில் இறங்கினர். குறிப்பாக கோரி ஆண்டர்சன், வங்காளதேசத்தின் பந்து வீச்சை சிதைத்து எடுத்தார். மோர்தாசாவின் ஓவர்களில் 3 சிக்சர்களை பறக்க விட்ட, ஆண்டர்சன், சவும்யா சர்காரின் ஓவரிலும் ‘ஹாட்ரிக்’ சிக்சர் நொறுக்கினார். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

அணியின் ஸ்கோர் 165 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. வில்லியம்சன் 60 ரன்களில் (57 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். ஆண்டர்சன் – வில்லியம்சன் ஜோடி 124 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் 4–வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஆண்டர்சனின் ருத்ரதாண்டவம் கடைசி வரை நீடித்தது. இறுதி ஓவரிலும் இரண்டு முறை பந்தை சிக்சர் எல்லைக்குள் தூக்கினார்.

நியூசிலாந்து 194 ரன்கள் குவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. முதல் 10 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 139 ரன்களை சேகரித்தது. சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய கோரி ஆண்டர்சன் 94 ரன்களுடன் (41 பந்து, 2 பவுண்டரி, 10 சிக்சர்) களத்தில் இருந்தார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை 26 வயதான ஆண்டர்சன் படைத்தார். இதற்கு முன்பு பிரன்டன் மெக்கல்லம் 2010–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 8 சிக்சர் விரட்டியதே நியூசிலாந்து வீரரின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (14 சிக்சர், இங்கிலாந்துக்கு எதிராக), தென்ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி (13 சிக்சர், நியூசிலாந்துக்கு எதிராக), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (11 சிக்சர், இங்கிலாந்துக்கு எதிராக, 10 சிக்சர், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

வங்காளதேசம் தோல்வி
தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சவும்யா சர்கர் 42 ரன்களும், ‌ஷகிப் அல்–ஹசன் 41 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக முதல் இரு ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து அணி 6 விக்கெட் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் வெலிங்டனில் 12–ந்தேதி தொடங்குகிறது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.