Breaking News
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு “இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்”

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

மோடி தொடங்கி வைத்தார்

14-வது இந்திய சுற்றுலா தின (பிரவாசி பாரதீய திவாஸ்) 3 நாள் மாநாடு, நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாள் இளைஞர் இந்திய சுற்றுலா தின மாநாடு நடைபெற்றது. 2-வது நாளான நேற்று இந்திய சுற்றுலா தின மாநாட்டின் தொடக்க விழா நடந்தது.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போர்ச்சுகல் நாட்டின் பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஆன்டனியோ கோஸ்டா கலந்து கொண்டார். மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் வரவேற்றார். இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெரிய போராட்டம்

இன்று (நேற்று) மகாத்மா காந்தி, தென்ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தினம். இதை பிரவாசி பாரதிய தினமாக நாங்கள் கொண்டாடுகிறோம்.

கருப்பு பணமும், ஊழலும்தான் இந்த சமுதாயத்தை, நிர்வாகத்தை சீர்குலைத்து கொண்டிருக்கிறது. எனவேதான் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்துள்ளோம். ஆனால் இந்த திட்டத்தை மக்கள் விரோத நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

பங்களிப்பு

கருப்பு பணம், ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த பெரிய போராட்டத்தை பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன். இதற்கு ஆதரவு அளித்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நீங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மதிப்பிட முடியாத அளவுக்கு பங்களிப்பை அளித்துள்ளர்கள். அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஆண்டுக்கு 69 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் கோடி) முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்தியாவின் நூற்றாண்டு

எப்.டி.ஐ. என்ற வார்த்தைக்கு என்னை பொறுத்தவரை 2 அர்த்தம் உண்டு. ஒன்று, அன்னிய நேரடி முதலீடு, மற்றொன்று ‘முதலில் இந்தியாவின் வளர்ச்சி’ என்பது ஆகும்.

21-வது நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு என்று என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். வெளிநாடுகளில் வேலை தேடி செல்லும் இந்திய இளைஞர்களுக்காக நாங்கள் விரைவில் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

கலாசாரத்தை மறப்பது இல்லை

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்கள் மற்ற நாடுகளில் இருந்து குடிபெயர்வோருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நமது கலாசாரம் மற்றும் மாண்புகளை பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் நமது கலாசாரத்தை மறப்பது இல்லை.

வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பாஸ்போர்ட் எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை நாங்கள் பார்ப்பது இல்லை. நாங்கள் ரத்த உறவை பார்க்கிறோம். இந்தியாவுடனான உங்களின் நல்லுறவை பலப்படுத்த வேண்டும்.

தொழில் தொடங்க முன்வரவேண்டும்

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் தொழில் தொடங்க முன் வர வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமுதாயத்தில் வறுமையை போக்கவும் நீங்கள் உதவ வேண்டும்.

நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு வாழும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறேன். இது நல்ல பலனை கொடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் அங்கு சிக்கலில் சிக்கியபோது மத்திய அரசு முயற்சி எடுத்து அவர்களை மீட்டுள்ளது. அந்த வகையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 80 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வந்தோம். இப்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது அவர்களுக்கு உதவ அரசு தயாராக உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.