அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ‘லா லா லேண்ட்’ படத்துக்கு 7 விருதுகள்
அமெரிக்காவின் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கப்படுகிறது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்து மிகவும் கவுரவம் நிறைந்ததாக கருதப்படும் இந்த விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.
இதில் ‘லா லா லேண்ட்’ என்ற ஆங்கில படம், சிறந்த நடிகர்–நடிகை, இயக்குனர், திரைக்கதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்த 7 பிரிவுகளிலும் விருது பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில் நடித்ததற்காக ரியான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் ஆகியோர் முறையே சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது பெற்றனர்.
படத்தின் இயக்குனர் டேமியன் சசெல்லி சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதைக்கான விருதை பெற்றார். இதைப்போல சிறந்த இசைக்கான விருதையும் லா லா லேண்ட் திரைப்படம் வென்றது. சிறந்த காதல், நகைச்சுவை திரைப்படமான இது ஆஸ்கார் விருது போட்டியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத்தவிர சிறந்த துணை நடிகருக்கான விருதை ஆரோன் டெய்லர் ஜான்சனும் (நாக்சுர்னல் அனிமல்ஸ்), துணை நடிகைக்கான விருதை வயோலா டேவிசும் (பென்சஸ்) பெற்றனர். இந்த விழாவில் ‘சிசில் பி டெமில்லி’ விருது பெற்ற நடிகை மெரில் ஸ்ட்ரீப், டொனால்டு டிரம்பை விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி