Breaking News
தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்படும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிகள் நிலவரி முழுவதுமாக தள்ளுபடி; பயிர் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களைக் காக்கும் நடவடிக்கை

வெள்ளம், புயல், வறட்சி ஆகிய இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது அவற்றை தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2012-13-ம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோது, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வரலாறு படைத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தற்போது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குழுக்கள் அமைப்பு

தமிழ்நாட்டில் வறட்சி சூழ்நிலை உருவாகியிருந்த நிலையில் அதுபற்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை வழங்குவதற்காக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்களை உடனடியாக அமைக்க நான் உத்தரவிட்டிருந்தேன்.

இதுபற்றி அறிக்கை ஒன்றையும் 3-ந் தேதியன்று நான் வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் 3-ந் தேதியன்றே அமைக்கப்பட்டன.

ஆலோசனை கூட்டம்

இந்த குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டு தங்களது அறிக்கையை அரசுக்கு 9-ந் தேதியன்று (நேற்று முன்தினம்) அளித்தனர். இந்த குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் விரிவான ஆலோசனை கூட்டம் 9-ந் தேதியன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக் கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பனீந்திர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் பி.சந்திரமோகன், வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் கோ.சத்யகோபால், வேளாண்மைத்துறை இயக்குனர் வ.தட்சிணாமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அனைத்து மாவட்டங்களும்…

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்தவேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மத்திய காலக் கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய காலக்கடன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் 3 ஆயிரத்து 28 கோடி ரூபாய் பயிர்க்கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் மத்திய காலக்கடனாக மாற்றியமைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரும் பொருட்செலவு ஏற்படும். எனவே, மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும். அதற்கான வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

நிவாரண உதவித்தொகை

பேரிடர் நிவாரண வரையறையின்படி பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டு 27.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 465 ரூபாய்; நெல் தவிர, இதர நீர்ப் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 465 ரூபாய்; மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய்; நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 287 ரூபாய்; முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

அரசுக்கு செலவு அதிகம்

பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக் கான இழப்பீட்டுத் தொகையை பெற இயலும். அதற்கான பயிர் அறுவடை பரிசோதனை விரைந்து மேற்கொள்ளப்படும்.

பேரிடர் நிவாரண வரையறைப்படி, நிவாரணம் மட்டுமே பெற இயலும் என்பதால், பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பயிர்க்காப்பீடு செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், அரசுக்கு செலவு அதிகம் என்றாலும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

பிரிமீயம் தொகை ரூ.40 கோடி

கடந்த ஆண்டுகளில் சராசரியாக பயிர்க் காப்பீட்டிற்கு அரசின் பங்களிப்பு பிரிமீயம் தொகையாக 40 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.

நெல் சாகுபடி செய்த விவசாயிகள், முழு பயிரிழப்பு அதாவது 100 சதவீத பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் மாவட்டத்தைப் பொறுத்து, ஏக்கர் ஒன்றுக்கு 21 ஆயிரத்து 500 முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற இயலும்.

டெல்டா மாவட்டம்

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, இழப்பீட்டுத் தொகை 25 ஆயிரம் ரூபாய் ஆகும். டெல்டா மாவட்டங்களில் 80 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய்; 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய்; 33 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரத்து 250 ரூபாய் பெற இயலும்.

இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை 33 சதவீதத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் மகசூல் இழப்பிற்கு ஏற்றபடி இழப்பீடு பெற இயலும். இதே போன்று, மற்ற பயிர்கள் பயிரிட்டு பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளும், அந்தந்த மாவட்டங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையை இழப்பீடாக பெற இயலும்.

பணி வரம்பு நாள் உயர்வு

சோளப் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும், பயறு வகைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரையிலும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரையிலும், மஞ்சள் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயிரிழப்புக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.

வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும்.

கால்நடை தீவனம் வழங்கப்படும்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் 3,400 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை வாயிலாக பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 78 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் பற்றாக்குறை

வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நீராதார மேம்பாடு

வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பொதுப்பணித்துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தற்கொலை நிவாரணம்

கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்த தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது பற்றி விரிவான அறிக்கை மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றபின், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தக்க நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.