Breaking News
அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமருக்கு மனு ‘‘ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்’’

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமருக்கு சசிகலா எழுதிய கடிதத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்தில் அளித்தனர்.

பிரதமருக்கு கடிதம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அரசியல் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பிரதமர் அலுவலகத்துக்கு சென்று அந்த கடிதத்தை அளித்தனர். பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவிடம் அவர்கள் கடிதத்தை வழங்கினார்கள்.

பிரதமர் அலுவலகத்தில் கடிதத்தை வழங்கிய பின் மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:–

அவசர சட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதினார். அதை வலியுறுத்துகின்ற வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எழுதிய கடிதத்தை பிரதமரிடம் கொடுப்பதற்காக நாங்கள் வந்தோம்.

ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தாலும், மத்திய அரசு இதற்காக அவசர சட்டம் பிறப்பித்தால் போட்டியை நடத்தலாம் என்று ஜெயலலிதா மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார். அந்த அடிப்படையில் சசிகலாவும் கடிதம் எழுதி இருக்கிறார்.

கென்ய அதிபர் வருகையையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் சென்று விட்டதால், அவரது முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா எங்கள் கடிதத்தை பெற்றுக்கொண்டார். இந்த கடிதத்தின் அடிப்படையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் கலாசாரம்
கடந்த 2011–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அந்த பட்டியலில் இருந்து காளையை நீக்கவேண்டும். இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியது இல்லை.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை இந்திய கலாசாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அலுவல் காரணமாகத்தான் பிரதமர் எங்களை சந்திக்கவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்களை பிரதமர் உதாசீனப்படுத்தவில்லை.

இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.

மந்திரியுடன் சந்திப்பு
முன்னதாக, அ.தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி அனில் மாதவ் தவேயை சந்தித்து அவரிடமும் சசிகலாவின் கடிதத்தை வழங்கினார்கள்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அனில் மாதவ் தவே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

காத்து இருக்கும் மத்திய அரசு
நம் நாட்டில் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு என்று ஜனநாயக ரீதியிலான அமைப்புகள் உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அதன் முடிவுக்காக மத்திய அரசு காத்து இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. எனவே இதை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை தெரிவிக்கும் என்றும், மக்கள் முழு சந்தோ‌ஷத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும் என்றும் நம்புகிறேன்.

இவ்வாறு அனில் மாதவ் தவே கூறினார்.

எம்.ஜி.ஆர். தபால் தலை
அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று மத்திய தகவல் தொழில் நுட்பதுறை ராஜாங்க மந்திரி மனோஜ் சின்காவையும் சந்தித்து, எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த தபால் தலை வெளியிட வேண்டும் என்று கோரி ஒரு மனுவை அளித்தனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.