ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும் நிறைவு உரையில் ஜனாதிபதி ஒபாமா உருக்கம்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் தனது ஆதரவாளர்கள் இடையே நேற்று முன்தினம் இரவு நிறைவு உரையாற்றினார். (வழக்கமாக பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதிகள் வெள்ளை மாளிகையில் இருந்துதான் நிறைவு உரையை நிகழ்த்துவது வழக்கம்.)
20 ஆயிரம் பேர் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் ஒபாமா பேசும்போது பல நேரங்களில் உருக்கமாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டார். அவருடைய பேச்சு 55 நிமிடங்கள் நீடித்தது.
தனது பேச்சில், அமெரிக்க முஸ்லிம்களுக்கு எதிராக புதிய ஜனாதிபதி டிரம்ப் செயல்படக்கூடாது என்பதையும் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
ஒபாமா பேசியதாவது:-
பாதுகாக்கவேண்டும்
2008-ம் ஆண்டு தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எனது திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்காதீர்கள். மாற்றத்தை ஏற்படுத்துவது உங்களிடம்தான் இருக்கிறது என்றேன். ஆம், நம்மால் முடியும் என்ற கோஷத்தையும் வைத்தேன். அதை செய்தும் காட்டினோம்.
அமெரிக்க ஜனநாயகத்துக்கு இன்று அச்சுறுத்தல் உள்ளது. இதற்கு நாம் பயந்துவிடக் கூடாது. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், நாம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். ஜனநாயகத்தின் மதிப்பை பலவீனப்படுத்தும் சக்திகளிடம் இருந்து அதை பாதுகாக்கவேண்டும். ஏனென்றால் ஜனநாயகம்தான் நம்மை ஒன்று சேர்த்து இருக்கிறது.
பாகுபாடு கூடாது
நாட்டை அச்சுறுத்தி வந்த பயங்கரவாத சக்திகள் பலவும் முறியடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அமெரிக்கா ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறி இருக்கிறது. ஒரு வலுவான நாடாக திகழ்கிறது. இந்த 8 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் அமெரிக்காவை தாக்கவில்லை.
அதேநேரம் இன பாகுபாடு இன்னும் அமெரிக்காவில் பலமாகத்தான் இருக்கிறது. அது நமது சமூக அமைப்பை பிளவு படுத்துவதாகவும் உள்ளது. இதற்கு நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களையவேண்டும். அமெரிக்க முஸ்லிம்களை நாம் பாகுபடுத்தி பார்க்கக் கூடாது. ஏனென்றால் நம்மை போலவே அவர்களும் நாட்டின் சுதந்திர போரில் பங்கு கொண்டவர்கள்தான்.
வாழ்நாள் கவுரவம்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள். அமெரிக்காவை அச்சுறுத்துபவர்கள் யாரும் பாதுகாப்பாக இருந்தது இல்லை. ஒசாமா பின்லேடன் உள்பட பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை நாம் வீழ்த்தினோம்.
நமது தலைமையில் கூட்டு படைகளை அமைத்து, பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலப்பரப்பில் பாதியை நாம் மீட்டு விட்டோம். இதை எனது வாழ்நாள் கவுரவமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனைவிக்கு நன்றி
தனது பேச்சின் இடையே மனைவி மிச்சேல் மற்றும் 2 மகள்களுக்கும் ஒபாமா நன்றி தெரிவித்தார்.
“கடந்த 25 ஆண்டுகளாக மிச்சேல் எனக்கு மனைவியாக, இரு குழந்தைகளுக்கு தாயாக மட்டுமின்றி நல்லதொரு நண்பராகவும், புதிய தலைமுறையினருக்கு சிறந்த முன் மாதிரியாக திகழ்கிறார். வெள்ளை மாளிகையை அனைவருக்கும் உரிய இடமாக மாற்றினார்” என்று குறிப்பிட்டபோது அவருடைய குரல் தழுதழுத்தது.
அப்போது, முன் வரிசையில் அமர்ந்து இருந்த மிச்சேல் எழுந்து நின்று ஒபாமாவுக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்தார். அதை பாராட்டிய கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.
நன்றி : தினத்தந்தி