Breaking News
வித்தியாசமான தோற்றங்களில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோர் தங்களுடைய புதிய படங்களில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

காதலுக்கு மட்டும்

கதாநாயகர்கள், தங்கள் படங்களில் உடம்பை ஏற்றியும் இறக்கியும் முகத்துக்கு ‘மேக்கப்’ போட்டு வித்தியாசப்படுத்தியும் கஷ்டப்பட்டு நடித்து ரசிகர்களை கவர்வது உண்டு. கதாநாயகிகள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளில் அரைகுறை ஆடைகளில் வந்து நடனம் ஆடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.

ஆனால் அந்த நிலைமைகள் தற்போது மாறி வருகிறது. முன்னணி கதாநாயகிகள் தங்களுக்கும் கதாநாயகர்களுக்கு இணையாக கதைகளில் முக்கியத்துவம் கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாத படங்களை உதறித்தள்ளுகிறார்கள். புதுமுக நடிகர்கள் படங்களில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கூட அவர்களுடன் நடிக்க தாராளமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பெரிய கதாநாயகர்கள்

இதனால் பெரிய கதாநாயகர்கள் புதிதாக வரும் இளம் கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து அவர்களை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது.

இப்படி பெரிய கதாநாயகர்களை ஒதுக்கி விட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோரை பார்க்க முடிகிறது.

நயன்தாரா-அனுஷ்கா

நயன்தாரா, ‘மாயா’ படத்தில் பேயாகவும், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காதுகேட்காத பெண்ணாகவும் வந்து திறமை காட்டினார். தற்போது டோரா, இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் ஆகிய திகில் படங்களில் நடித்து வருகிறார். அறம் என்ற படத்தில் துணிச்சலான கலெக்டர் வேடம் ஏற்றுள்ளார். இந்த படங்கள் எதிலும் பெரிய கதாநாயகர்கள் இல்லை என்பது விசேஷம்.

அனுஷ்கா அருந்ததி படத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை மேலும் இருபது கிலோ ஏற்றி குண்டு பெண்ணாகவும் ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் வாள் வீசி ஆண்கள் தலைகளை கொய்யும் ராணியாகவும் வந்து அசத்தினார். தற்போது திருப்பதி வெங்கடேச பெருமாள் மகிமைகளை மையப்படுத்தி தயாராகும் பக்தி படமான ‘ஓம்நமோ வெங்கடேசாய’ படத்தில் கிருஷ்ணம்மா என்ற பெண் பக்தை வேடத்தில் வருகிறார். பாகுபலி இரண்டாம் பாகத்தில் ராணியாக நடிக்கிறார்.

திரிஷா-ஸ்ரேயா

திரிஷா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் மோகினி என்ற திகில் படத்திலும், சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் ‘1818’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பயங்கரவாதிகளுடன் ஆக்ரோஷமாக மோதி அவர்கள் பிடியில் பணயக்கைதிகளாக இருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்ரேயா கவுதமி புத்ர சதாகர்னி என்ற படத்தில் ராணி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. வினியோகஸ்தர்களும் இவற்றை வாங்கி வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.