ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இரவு முழுவதும் தொடர்ந்த இளைஞர்கள் போராட்டம்: இன்று மேலும் தீவிரமாகிறது
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் தை 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் இளைஞர்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், முகநூல் நண்பர்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு முற்றுகை போராட்டம் தொடங்கினர். இதில் சென்னை, கோவை, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போலீசார் போரட்டக்காரர்களை கைது செய்தனர்.
இதனிடையே, அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். காலை தொடங்கிய போராட்டம் தற்போது வரை நீடிக்கிறது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின் நடுவே இளைஞர்களை குழுவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முதல்வர் நேரில் வர வேண்டும் அல்லது அறிக்கை மூலம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனிடையே, மதுரை அலங்காநல்லூரில் இரண்டாவது நாளாக இன்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வா.உ.சி மைதானத்தில் நேற்று இரவு முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மெரினாவில் போராட்டம் மேற்கொண்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் வைத்து போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதற்காக, போராட்டகாரர்களின் பிரதிநிதிகளாக சில இளைஞர்கள் அமைச்சரின் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
சென்னையை போல், புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓய மாட்டோம் உள்ளிட்ட முழக்கங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் இருந்தனர்.கொட்டும் பனியிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இரவு முழுவதும் போராடி வருவதும் பெரும் தன்னெழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இன்று போராட்டமானது மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன் பேச்சு திருப்தி அளிப்பதாகவும் முதல் அமைச்சரின் அறிக்கை அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் போராடும் இளைஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
நன்றி : தினத்தந்தி