2014-ம் ஆண்டு, 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370), 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நள்ளிரவு 12.41 மணிக்கு, 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்தபோது, சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மறைந்தது.
அந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கூறப்பட்டது.அந்த விமானத்தை தேடுகிற பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. உலகிலேயே மிகப்பெரிய தேடுதல் வேட்டையாக அது அமைந்தது. இதுவரை இல்லாத வகையில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் தேடல் பணி நடந்தும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை.இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.
இது தொடர்பாக சீனா, ஆஸ்திரேலியா, மலேசிய அதிகாரிகள் நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள், “அறிவியல், தொழில்நுட்ப வசதிகளையும், ஆற்றல்வாய்ந்த வல்லுனர்கள் ஆலோசனைகளையும் பயன்படுத்தி தேடுதல் பணி நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானத்தை கடலுக்கு அடியில் தேடி வந்த பணியை நிறுத்திவிடுவது என முடிவு எடுத்துள்ளோம்” என கூறி உள்ளனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேரும் உயிரிழந்து விட்டதாக கருதப்படுகிறது.
நன்றி : தினத்தந்தி