Breaking News
வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக் குதிக்கும் – ஓபிஎஸ் உறுதி

சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.

அதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.