Breaking News
இஸ்லாமிய தீவிரவாதத்தை உலகில் இருந்தே அகற்றுவேன்: பதவியேற்பில் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு

இஸ்லாமிய தீவிரவாதம் உலகில் இருந்து அகற்றப்படும் என அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். இது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்றார். துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழா வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதியில் நடைபெற்றது. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்பிறகு அதிபராக தனது முதல் உரையையாற்றினார் டொனால்ட் ட்ரம்ப். அப்போது தனது தேர்தல் பிரசாரத்தில் வலியுறுத்தி பேசிய இரு விஷயங்களை உச்சரித்தார். அதில் ஒன்று, அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்பு என்பது இன்னொன்று தீவிரவாதத்தை வேரறுப்பது பற்றியது.

ட்ரம்ப் உரையிலிருந்து:

*பழைய கூட்டணிகளை புதுப்பிப்போம். புதிய கூட்டணியை உருவாக்குவோம். நாகரீகமான சமூகத்தை ஒன்றிணைத்து தீவிர இஸ்லாமிய தீவிரவாதத்தை உலகிலிருந்தே மொத்தமாக அகற்றுவோம்.

*அமெரிக்கர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அமெரிக்காவின் எல்லைகள் பலப்படுத்தப்படும்.

*கடவுளாலும், திறமையான ராணுவத்தினராலும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

*வெற்று பேச்சு காலம் முடிந்தது, இது செயல்பாடுக்கான காலம்.

*கருப்பினத்தவரோ, வெள்ளையரோ அனைவர் உடலில் ஓடுவதும் அமெரிக்க ரத்தமே

*அமெரிக்காவில் பிறக்கும் எல்லா இனத்தினரும் அமெரிக்க தேசபக்தர்களே.

*அரசியல்வாதிகள் செல்வந்தர்களாகிவிட்டனர், ஆனால் அமெரிக்கர்களோ வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர்.

*அமெரிக்காவின் வேலை வாய்ப்பும், தொழில்கூடங்களும் மூடப்பட்டுவிட்டன. இப்பிரச்சினைகளில் இருந்து அமெரிக்காவை கடவுள் ஆசீர்வதிப்பார்.

*அமெரிக்கா மீண்டும் வெற்றியடையும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றியடையும்.

*நாங்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை திரும்ப கொண்டுவருவோம், அமெரிக்க எல்லையை பாதுகாப்போம், அமெரிக்காவின் செல்வங்களை திருப்பி கொண்டுவருவோம். அமெரிக்கர்களின் கனவை திருப்பி கொண்டுவருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக அதிக தாக்குதல்கள் நடைபெற்றிருந்த நிலையில், கருப்பினத்தவர்கள் பாதுகாப்பு பற்றி ட்ரம்ப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.