பயங்கரவாதிகளை விசாரிக்க மீண்டும் சித்ரவதை முறை டிரம்ப் பரபரப்பு பேட்டி
‘‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், பயங்கரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்’’ என்று டிரம்ப் பரபரப்பு பேட்டி அளித்தார்.
சித்ரவதை முறை
அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தினர் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்ற வகையில், பயங்கரவாதிகளை விசாரிப்பதற்கு அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் சித்ரவதை முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது ‘வாட்டர்போர்டிங்’ என்ற சித்ரவதை முறை பின்பற்றப்பட்டது.
இந்த முறையில் விசாரணை செய்யப்படுபவரின் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும். பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு கட்டத்தில் இது நுரையீரல் சேதம், மூளைச்சேதம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். கட்டுப்படுத்தி வைப்பதற்கு எதிராக போராடுகிறபோது, எலும்புகள் உடைவது உள்ளிட்ட உடல் காயங்கள் ஏற்படும். மரணமும் நேரிட வாய்ப்பு உண்டு.
ஆனால் தற்போது அமெரிக்காவில் பயங்கரவாதிகளை, கைதிகளை விசாரிப்பதற்கு சித்ரவதை செய்வதில்லை. ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறைக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தடை விதித்தார்.
தீவிர பரிசீலனை
தற்போது அமெரிக்க உளவு முகமை சி.ஐ.ஏ.யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள மைக் பாம்பியோ, சில தினங்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், ‘‘விசாரணையில் சித்ரவதையை அனுமதிக்க மாட்டேன்’’ என்று கூறினார். ஆனால் இப்போது அவர், ‘‘குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மீண்டும் ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பேன்’’ என்று கூறினார்.
இந்த நிலையில் டிரம்ப் ஏ.பி.சி. நியூஸ் டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–
என்னிடம் உளவுத்துறையில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் எல்லாரும், சித்ரவதை பயன்தராது என கூறினர்.
யாரும் கேள்விப்பட்டிராத அளவில் ஐ.எஸ். இயக்கத்தினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே நானும் ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து மிக தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன்.
நம்பிக்கை
என்னைப் பொறுத்தமட்டில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
அப்பாவி மக்களை ஐ.எஸ். இயக்கத்தினர் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள். ஆனால் எதையும் செய்வதற்கு அமெரிக்கா அனுமதிப்பதில்லை.
நாம் அவர்களோடு சம அளவுக்காவது செயல்பட வேண்டாமா? நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்குமா? பலன் அளிக்கும் என்றுதான் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி