Breaking News
தொடரை வெல்லப்போவது யார்? கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா- இங்கிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.

பெங்களூரு,

20 ஓவர் கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் (0-4) மற்றும் ஒரு நாள் தொடர்களை (1-2) இழந்து விட்ட இங்கிலாந்து அணி தற்போது 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கான்பூரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

வழக்கமாக 20 ஓவர் போட்டி என்றாலே பேட்ஸ்மேன்களின் ரன்ஜாலமே மேலோங்கி நிற்கும். அதை தான் ரசிகர்களும் விரும்புவார்கள். ஆனால் இந்த தொடரில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது. 150 ரன்கள் கூட எடுக்கப்படவில்லை. முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 147 ரன்களும், 144 ரன்களும் எடுத்தன. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதற்கு மொயீன் அலி (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) ஆகியோர் ஆட்டநாயகன் விருது பெற்றதே சான்று.

சாதிப்பாரா கோலி?

இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் இந்திய வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். உள்ளூரில் கோலியின் தலைமையில் இந்திய அணி எந்த ஒரு தொடரையும் இழந்தது இல்லை. அந்த பெருமையை தக்க வைக்க முயற்சிப்பார்கள். யுவராஜ்சிங், டோனியின் ஆட்டம் முதல் இரு ஆட்டங்களில் எடுபடவில்லை. இன்றைய மோதலில் ரன்வேட்டை நடத்தினால், அணிக்கு உதவிகரமாக இருக்கும். நாக்பூர் ஆட்டத்தில் 71 ரன்கள் விளாசிய லோகேஷ் ராகுல் பார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோலி அணிக்கு சொந்த ஊர் மைதானம் பெங்களூரு. அதனால் அவருக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அவரும் பெங்களூருவில் முத்திரை பதிக்கும் ஆவலில் உள்ளார்.

கடந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஷிஷ் நெஹராவும், பும்ராவும் மிரட்டினர். குறிப்பாக பும்ரா கடைசி இரு ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தியதாலேயே 5 ரன்கள் வித்தியாசத்தில் நமது அணிக்கு வெற்றி கிடைத்தது. அதே உத்வேகத்துடன் மீண்டும் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

பதிலடி கொடுக்க வியூகம்

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டெஸ்ட், ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பரிகாரமாக 20 ஓவர் கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர். நாக்பூர் ஆட்டத்தில் மயிரிழையில் வெற்றியை கோட்டைவிட்ட இங்கிலாந்து வீரர்கள் அதற்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள். அதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

பொதுவாக பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு உகந்தது. ஒரு நாள் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் இங்கு வீரர்கள் சிக்சர் மழை பொழிந்து இருக்கிறார்கள்.

ஆனால் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இங்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் அதிரடி காட்டியது இல்லை. இங்கு இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (2016-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக ஒரு ரன்னில் வெற்றி), ஒன்றில் தோல்வியும் (2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டில் தோல்வி) கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சம் என்பது நினைவு கூரத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, நெஹரா.

இங்கிலாந்து: சாம் பில்லிங்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், டாவ்சன் அல்லது பிளங்கெட் டைமல் மில்ஸ், அடில் ரஷித்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.