பண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அதே தொகை அபராதம்
ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
கருப்பு பணப்புழக்கத்தை தடுக்கும் நோக்கில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்ட மத்திய அரசு, ரொக்கபண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.
இந்த ரொக்க பரிமாற்றத்துக்கான கட்டுப்பாடு குறித்து மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா, பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அதே அளவு அபராதம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏராளமான கருப்பு பணம் தற்போது வங்கி கணக்கில் வந்துள்ளது. இனிமேல் எதிர்கால தலைமுறை மூலம் எந்தவகையிலும் கருப்பு பணம் சேராமல் இருக்க மத்திய அரசு விரும்புகிறது. எனவே அனைத்து விதமான பெரிய தொகை கொண்ட பரிமாற்றங்களையும் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பெரிய தொகையிலான ரொக்கபண பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 1–ந் தேதி முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும். எடுத்துக்காட்டாக ரூ.4 லட்சம் பரிமாற்றம் என்றால் ரூ.4 லட்சமும், ரூ.50 லட்சம் பரிமாற்றம் என்றால் ரூ.50 லட்சமும் அபராதம் வசூலிக்கப்படும்.
பணத்தை வாங்குவோருக்கு அபராதம்
இத்தகைய பரிமாற்றங்களில் பணத்தை வாங்குவோருக்கே இந்த அபராதம் விதிக்கப்படும். ஒருவர் ரூ.3 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினால், அந்த பணத்தை வங்கும் கடை உரிமையாளருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.
எனினும் வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கி போன்ற அரசு நிறுவனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது.
மக்கள் அதிகமான கருப்பு பணத்தை கார், கைக்கடிகாரம், நகைகள் போன்ற ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் செலவழித்து வருகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் மேற்கண்ட செலவினங்கள் கட்டுப்படுவதுடன், கருப்பு பணம் பதுக்குதலும் தடுக்கப்படும்.
இவ்வாறு ஹஸ்முக் அதியா கூறினார்.
நன்றி : தினத்தந்தி