Breaking News
5 வயது சிறுவன் ஒப்படைப்பு இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பெண் ரோகினா கியானி. இவருக்கும், காஷ்மீரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமான சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்–மனைவி இருவரும் பிரிந்தனர். 5 வயதான சிறுவன் இப்திகார் அகமது தாயுடன் வசித்து வந்தான்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரோகினா கியானியின் கணவர் சிறுவன் இப்திகார் அகமதை துபாயில் நடைபெறும் திருமண விழாவிற்கு அழைத்துச் செல்வதாக பொய் கூறி, அவனை காஷ்மீருக்கு கொண்டு வந்து விட்டார். இதனையடுத்து தனது மகனை மீட்டு தரக்கோரி ரோகினா கியானி பாகிஸ்தான் அரசின் உதவியோடு டெல்லி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனை தாயிடம் ஓப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய–பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் சிறுவனை தாயிடம் ஒப்படைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாபில் உள்ள வாகா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்களிடம் சிறுவன் இப்திகார் அகமதை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பாசித் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘மனிதாபிமான அடிப்படையிலான இந்த நடவடிக்கையில் இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றி’’ என குறிப்பிட்டு உள்ளார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.