பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்சன் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இக்பால் ஜாபர் 2 விக்கெட்டும், கீதன் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இக்பால் ஜாபர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். சுக்ராம் மஜ்ஹி 56 ரன்னுடனும், அஜய்குமார் ரெட்டி 72 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 8–வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 7–வது வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்கிறது.
நன்றி : தினத்தந்தி