ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. பின்னர் கர்நாடக ஐகோர்ட்டு அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பெங்களுரு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் தலா ரூ.10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் சார்பில் ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்த வேண்டுமா? என்று சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் கூறுகையில், மரணம் அடைந்ததன் காரணமாக வழக்கில் இருந்து ஜெயலலிதா விலக்கப்பட்டு விட்டதால், அவருக்காக ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டியது இல்லை என்றும், மற்றபடி எந்தெந்த சொத்துகளையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டும் என்று தனிக்கோர்ட்டு கூறி உள்ளதோ அந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினத்தந்தி