அதிமுக துணை பொதுச் செயலர் தினகரன் நியமன பின்னணி
திமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன்தான் டிடிவி.தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளராக டிடிவி.தினகரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நேற்றைய தேதியில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சியில் சேர்க்கப்பட்ட உடனேயே அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
நியமனத்தின் பின்னணி?
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோர் விரைவில் சிறை செல்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் அதிர்வலைகளுடன் அதிமுகவில் உட்கட்சி பூசலும் வலுத்துவரும் நிலையில் டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் முக்கியப் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. சசிகலா சிறை செல்வதால் அவர் சிறையிலிருந்தாலும் கட்சி மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது உறவினருக்கு அவசர அவசரமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்திலுள்ள புகார் காரணமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்ய முடியாது முறைப்பட்டி அதிமுக தொண்டர்களிடம் தேர்தல் நடத்தியே தேர்வு செய்ய வேண்டும், தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவி செல்லாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதபட்டிருக்கிறது. இந்தப் புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா இழக்க நேரிடலாம், எனவே அத்தகைய சூழலில் கட்சியின் மீது பிடி தளர்ந்துவிடாமல் இருக்கவே இத்தகைய அவசர முடிவை சசிகலா எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியில் இல்லாவிட்டாலும் முக்கியத்துவம்..
டிடிவி தினகரன் கட்சியில் இல்லாவிட்டாலும், கடந்த 9-ம் தேதி சசிகலா ஆளுநரை சந்திக்கச் சென்றபோது நேற்று (14-ம் தேதி) எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்கச் சென்றபோதும் அவர்களுடன் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் சசிகலாவுடன் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருந்து வருகிறர். கடந்த 7-ம் தேதி, மெரினாவில் ஜெ. சமாதியில் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என தினகரன் விரும்புவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தன்னிடம் கூறினார்” என மேற்கோள் காட்டி கட்சியில் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்துவாக குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தி இந்து தமிழ்