பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது:
சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதனால் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு நகர குடிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 48-வது அறையில் நீதிபதி அஷ்வத் நாராணா முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த உடன் மூவரும் ஆஜராவார்கள். அதன்பிறகு மூவரும் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பெங்களூரு மத்திய சிறை நிர்வாகத்தினர், சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் மகளிர் சிறையிலும், சுதாகரனுக்கு ஆண்களுக்கான சிறையிலும் தனித்தனி அறைகளைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அனைத்து அலுவல் பணிகளும் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல நீதிமன்ற வளாகத்திலும் பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் பரி சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
நன்றி : தி இந்து தமிழ்