Breaking News
தமிழக அரசியலில் குழப்பம்: என்ன செய்யப் போகிறது திமுக?

தமிழக அரசியலில் குழப்பம் தொடரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு 12 எம்.பி.க்களும், அமைச்சர் கே.பாண்டியராஜன் உட்பட 10 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவைத் தலைவர் இ.மதுசூதனன், சி.பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவுக்குப் பதிலாக அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்கவும் அவர் உரிமை கோரினார். ஆனாலும், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 5-ம் தேதி தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில் 89 எம்எல்ஏக்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை குறித்து கடந்த 13-ம் தேதி நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கணிசமான அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைக்க முடியுமா அல்லது அதிமுகவில் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தலாமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘அதிமுகவில் முதல்வர் யார் என்ற போட்டி காரணமாக தமிழக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. ஓபிஎஸ், சசிகலா இருவரையும் திமுக ஆதரிக்காது. நிலையான அரசு அமைய ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை வரு மாறு திமுக எம்எல்ஏக்கள் அனை வருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘திமுக எம்எல்ஏக்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை’ என மறுப்பு தெரிவித்தார்.

அதே நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறலாம். எனவே, சென்னை வர தயாராக இருக்குமாறும், தலைமையுடன் தொடர்பில் இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சியை இழந்துள்ளது. இதனால் திமுகவினர் மனச்சோர்வு அடைந்துள்ளனர். எனவே, அதிமுகவில் ஏற்பட்ட இந்த குழப்பத்தை பயன்படுத்தி திமுக ஆட்சியமைக்க வேண்டும் அல்லது விரைவில் தேர்தலை சந்திக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என தலைமையிடம் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளோம். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் திமுக அமோக வெற்றி பெறும். எனவே, அதற்கேற்ப தலைமை முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.

கருணாநிதி இருந்திருந்தால் இந்தச் சூழலில் சரியான முடிவை எடுத்திருப்பார் என திமுகவிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு எழுந்துள்ளதால் எதையாவது செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. கணிசமான அதிமுக எம்எல்ஏக் களை இழுத்து திமுக ஆட்சி யமைக்க வேண்டும் என திமுகவில் ஒரு தரப்பினரும், அப்படி ஆட்சி அமைத்தால் அது நீண்டகாலம் நீடிக்காது. திமுகவுக்கு கெட்ட பெயர் வரும். எனவே, தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதற்கேற்ப காய்களை நகர்த்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் ஸ்டாலினிடம் தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.