Breaking News
பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 76 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சிந்து மாகாணம் செவான் நகரில், சூஃபி இஸ்லாமியர்களின் மசூதியில் வியாழக்கிழமை இரவு, மதத் தலைவரான சூஃபி லால் ஷாபாஸ் குவாலந்தருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் குவிந்து இருந்த மசூதியின் பிரதான வாயில் வழியாக உள்ள வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, முதலில் ஒரு கையெறி குண்டை அங்கிருந்தவர்களை நோக்கி வீசினான். அது வெடிக்கவில்லை. உடனே அவன், தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் பலியானார்கள் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

பாகிஸ்தான் போலீஸ் வெளியிட்டு உள்ள தகவலில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 76 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனை தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. மசூதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. 27 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர், இருப்பினும் பயங்கரவாதி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள்தான் சூஃபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 25 சூஃபி புனிதத் தலங்களில் அந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அவர்கள்தான் இத்தாக்குதலையும் நடத்தியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது, ஒரு வாரத்தில் நடக்கும் 5–வது பயங்கரவாத தாக்குதல் ஆகும்.

புனித தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.