பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா நிறைவேற்றம்: ஆண், பெண் இருபாலருக்கும் திருமண வயது 18
நீண்டகாலமாக ஆவலுடன் எதிர்பார்க் கப்பட்ட ‘இந்து திருமண மசோதா 2017’ பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. இதை அங்கு வசிக்கும் இந்துக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவுக்கு மனித உரிமைக்கான மேலவை செயற்குழு கடந்த ஜனவரி 2-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, நாடாளுமன்ற மேலவையில் சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீது இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். பின்னர் விவாதம் நடந்தபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி நாடாளுமன்ற கீழவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் அடுத்த வாரத்தில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இது சட்டமாகிவிடும்.
பாகிஸ்தானின் பஞ்சாப், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் திருமணத்துக்கான ஆதாரமாக உரிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள இந்த சட்டம் வகை செய்கிறது.
மேலும் ஆண், பெண் இருபாலருக்கும் திருமண வயது 18 என இதில் கூறப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் இந்து திருமண சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த மசோதாவின் ஒரு அம்சத்துக்கு இந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதாவது திருமணமான தம்பதியரில் ஒருவர் மதம் மாறினால், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்காக கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்த ரமேஷ் குமார் வங்க்வானி இதுகுறித்து கூறும்போது, “இந்த மசோதா கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க உதவும். அதேநேரம், தம்பதியரில் ஒருவர் மதம் மாறுவதற்கு முன்பே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், திருமணமான பெண்களை சிலர் கடத்திச் சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மதம் மாறிவிட்டார் என்று கூற வாய்ப்பு உள்ளது” என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்