“கைகளை சுத்தமாக வைத்திருந்தால் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்’
கைகளை சுத்தமாக வைத்திருந்தால் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கிருமிகள் தொற்றாமல் தடுக்கலாம் என சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வெ.யசோதாமணி தெரிவித்தார்.
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியது:
கைகளை நன்றாக கழுவுங்கள். அப்போதுதான் பன்றி காய்ச்சல் நோய் வராமலும், பரவாமலும் தடுக்க முடியும்.
கைகளால் நாம் அனைத்து விதமான செயல்களையும் செய்கிறோம். அப்போது நோய்க்கிருமிகள் கைகளில் தொற்றும் சூழல் ஏற்படுகிறது.
இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதன் தொடர்ச்சியாக வாய், மூக்கு, முகம், தலை என அனைத்து இடங்களிலும் கைகளால் தொடும் போது அப்பகுதிகள் வழியாக நோய்க்கிருமிகள் உடலுக்குள் பரவுகிறது.
எனவே எந்த ஒரு வேலை முடிந்த பிறகும் கண்டிப்பாக கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான நோய்களிலும் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். நிலவேம்பு குடிநீர் அனைத்து விதமான காய்ச்சலுக்கும் நல்ல மருந்து. பன்றி காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கிடையாது. வருமுன் காப்பதே சிறந்தது என்றார். மேலும் அவர் கைகளைக் கழுவும் முறைகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்று கொடுத்தார். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
தேவகோட்டை வட்டார மருத்தவ அலுலவர் கமலேஸ்வரன், சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவேகம்பத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோதண்டராமன், சுகாதார ஆய்வாளர் முத்துவேல் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார். நன்றி:தினமணி