மல்லையாவின் ரூ.4,200 கோடி சொத்து முடக்கம்: உறுதி செய்தது நீதிமன்றம்
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.4,200 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்காக அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இதன்மூலம், அந்த சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு, அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
மல்லையாவின் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பண்ணை வீடுகள், பங்குகள், வைப்பு நிதித் தொகை, மல்லையாவின் பெயரில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றை முடக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் உத்தரவு பிறப்பித்தது.
அவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6,630 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆவணங்களில் மொத்தம் ரூ.4,234 கோடி என்றே அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.