அரசு மருத்துவர்களை மிரட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், முல்லபாடு பகுதியில் நேற்று முன்தினம் தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 11 பயணிகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 37 பேர் நந்திகாமா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர் களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று நந்திகாமா மருத்துவ மனைக்கு சென்றார். அப்போது விபத்துக்குள்ளான தனியார் பேருந்து ஆளும் கட்சி பிரமுகருக்கு சொந்தமானது என்றும், இதன் காரணமாகவே ஓட்டுநரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப் படாமல் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட் டினார். மேலும் மருத்துவர்களிடம் இருந்த மற்றவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் வலுக்கட்டாயமாக பிடுங்கி வைத்து கொண்டு அவர்களுடன் நீண்ட நேரம் வாதாடினார். இதையறிந்து மருத்துமனைக்கு விரைந்து வந்த கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பாபுவிடமும் ஆவேசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நந்திகாமா மருத்துவ குழுவினர் நேற்று ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீஸாரிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அனைவரும் தங்களைப் பணி செய்யவிடாமல் ஜெகன் மோகன் ரெட்டி மிரட்டினார் என நந்திகாமா போலீஸார் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படை யில் ஜெகன் மோகன் ரெட்டி மீது 363-வது பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பாபுவிடம் தரக் குறைவாக நடந்து கொண்டதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திர மாநில ஐஏஎஸ் அதிகாரி கள் சார்பில் தலைமை செயலாளரிடம் மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.