Breaking News
சசிகலா தமிழக சிறைக்கு மாற்றமா? கர்நாடக மாநில சிறை அதிகாரி விளக்கம்

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து எந்த ஒரு கோரிக்கையும் தனக்கு வரவில்லை என்று பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு பதிலளித்துள்ளார்.

சசிகலா, இளவரசி ஆகியோரை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து எந்த ஒரு கோரிக்கையும் தனக்கு வரவில்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செய்த விண்ணப்பத்துக்கு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் சூப்பிரண்டு பதிலளித்துள்ளார்.

வக்கீல் மனு

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கும் எம்.பி.ராஜவேலாயுதம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை சூப்பிரண்டுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதற்கு, சிறையின் தலைமை சூப்பிரண்டு அளித்துள்ள பதில் விவரம் பின்வருமாறு:-

40 நிமிடம் சந்திப்பு

கேள்வி:- தண்டனை கைதி சசிகலாவை 4 மணி நேரம் சந்தித்து பேச டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி வழங்கப்பட்டதா?

பதில்:- சசிகலாவை சந்தித்து 35 முதல் 40 நிமிடங்கள் பேசுவதற்கு மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கேள்வி:- தண்டனை கைதியை சந்தித்து பேச டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி வழங்கியதற்கு என்ன காரணம்?

பதில்:- இந்த கேள்வி பொருந்தாது.

தமிழக சிறைக்கு மாற்றமா?

கேள்வி:- டி.டி.வி. தினகரன் சந்தித்து சென்ற பிறகு சசிகலாவுக்கு மெத்தை, கட்டில், தொலைக்காட்சி, ரேடியோ, மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, தண்ணீர் சூடேற்றி (வாட்டர் ஹீட்டர்), தனியாக குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- தொலைக்காட்சியை தவிர வேறு எந்த ஒரு வசதியும் சிறையில் இல்லை. செய்து கொடுக்கவும் இல்லை.

கேள்வி:- சசிகலாவையும், இளவரசியையும் தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்றவேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு, நீங்கள் (சிறை சூப்பிரண்டு) பரிந்துரை செய்துள்ளர்களா?

பதில்:- தண்டனை கைதிகளிடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை மனுவை இதுவரை நாங்கள் பெறவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.