Breaking News
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் எடுக்க ‘ஆதார்’ கட்டாயம் ஆகிறது

தற்போது, ரெயில் டிக்கெட் முன்பதிவு, வாடகை கார், உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தனித்தனி ‘மொபைல் ஆப்’கள் (செயலி) புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஒரே ஒரு ‘ஆப்’ மூலம் அனைத்து சேவைகளையும் பெறும்வகையில், ரெயில்வே துறை திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதுதான், ஒருங்கிணைந்த மொபைல் ஆப் ஆகும்.

இதை உருவாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மே மாதம் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.

2017-2018-ம் நிதி ஆண்டுக் கான ரெயில்வேயின் புதிய வணிக திட்டத்தை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று வெளியிட்டார். அதில்தான், இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த மொபைல் ஆப் மூலம், ரெயில் டிக்கெட் முன்பதிவு, வாடகை கார் முன்பதிவு, உணவகத்தில் உணவு ‘ஆர்டர்’ செய்தல், ஓய்வு அறைகள் முன்பதிவு, ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்தல், ரெயில் சுற்றுலா திட்டங்களை முன்பதிவு செய்தல் உள்பட ரெயில் பயணம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம். இதனால் சிக்கலின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும், முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை பெறுவதற்கும் இதை பயன்படுத்தலாம். அனைத்து புறநகர் மின்சார ரெயில்களின் டிக்கெட்டுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

இதனால், புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் வரிசை குறைவதுடன், காகித பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது. மின்னணு பண பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. எல்லாவகையான டிக்கெட் எடுப்பதற்கும் பதிவு முறை மற்றும் பணம் செலுத்தும் முறை பொதுவானதாகவே இருக்கும்.

இதுதவிர, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட் எடுப்பவர்கள், ஒரே ஒருமுறை பதிவு செய்து கொள்ள ‘ஆதார்’ எண் விரைவில் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது.

சிலர் போலி அடையாளங்களுடன் பதிவு செய்து கொண்டு, மொத்தமாக டிக்கெட்டுகளை எடுத்து, அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். இத்தகைய போலிகளை கட்டுப்படுத்துவதற்காகவே, ‘ஆதார்’ கட்டாயம் ஆக்கப்படுகிறது.

அதுபோல், மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெறுவதற்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ‘ஆதார்’ கட்டாயம் ஆகிறது.

ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்வகையில், நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 6 ஆயிரம் ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்களும், 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களும் நிறுவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.