வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு: உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு தகவல்
இதுவரை ரூ.70,000 கோடி அளவிலான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள ரூ.16,000 கோடியும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
கறுப்புப் பண விவரங்களை வெளியே கொண்டுவரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உதவித் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத், கட்டாக் நகரில் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களைக் கையாளும் பல்வேறு அரசு அதிகாரிகளைச் சந்தித்த பிறகு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறப்பு விசாரணைக் குழு தனது 6-வது இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சமர்ப்பிக்க வுள்ளது.
இது தொடர்பாக அரிஜித் பசாயத் கூறும்போது, “கறுப்புப் பண உருவாக்கத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறிய பல்வேறு பரிந்துரைகளை இடைக்கால அறிக்கைகளில் சிறப்பு விசாரணைக் குழு தந்துள்ளது. எங்களது பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சில பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன. கையில் ரொக்கமாக ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால் அது கணக்கில் காட்டப்படாத வருவாயாக கருதப்பட வேண்டும் என்ற எங்களது பரிந்துரையையும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
எங்களது பரிந்துரையின் பேரில்தான் ரூ.3 லட்சத்துக்கும் கூடுதலான ரொக்கப் பரிவர்த்தனை சட்ட விரோதம், தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது” என்றார்.
ஒடிசாவின் பொருளாதார குற்றங்கள் மற்றும் கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு நடவடிக்கை கள் குறித்து பசாயத் கூறும் போது, “அனைத்து விசாரணை அமைப்புகளிடையே ஒருங் கிணைப்பை உறுதி செய்யவே இங்கு சந்தித்தோம். இதன்மூலம் தவறாகச் சேர்க்கப்பட்ட சொத்து, பண விவரங்கள் வெளியே வரும்” என்றார்.
அதேபோல் தனியார் கல்வி நிறுவனங்கள், நகைக் கடைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களையே கடவுள் என்று அழைத்துக் கொள்ளும் சாமியார்கள், மாஃபியா தாதாக்கள் ஆகியோர் செய்யும் பல்வேறு நிதி முறைகேடுகள், தவறுகள் குறித்து விசாரித்து வரும் மாநில அமைப்புகள் தங்களது கண்டுபிடிப்புகளை வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அரிஜித் பசாயத் கூறினார்.