Breaking News
ஆரம்பகட்ட விசாரணையில், இலங்கை கடற்படைக்கு தொடர்பில்லை என மறுப்பு

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆரம்பகட்ட விசாரணைகளில், இலங்கைக் கடற்படைக்குத் தொடர்பில்லை எனத் தெரியவருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இந்திய மீனவர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் இந்த விஷயத்தை இலங்கை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று வெளியறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த முழு விசாரணையை மேற்கொள்வதாக இலங்கை கடற்படை உறுதியளித்துள்ளது எனவெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் இலங்கை கடற்படைக்கும் தொடர்பில்லை என்று தெரியவருவதாகத் தெரிவித்துள்ளது.
`மனித நேயத்தோடு நடத்தப்பட வேண்டும்’
அதே நேரத்தில், யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உள்பட அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தி, இந்திய அதிகாரிகளின் துணையுன் முழு விசாரணை நடத்தி, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து அரசுத் துறையினரும் இந்திய மீனவர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்பதில், இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கண்டனம்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், அவர்களின் படகுகளை கைப்பற்றுவதும் தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதை தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, நிரந்தர தீர்வு காண வற்புறுத்தி வந்துள்ளது. தற்போதைய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த மீனவர், பிரிட்ஜோ குடும்பத்திற்கு 5 லட்சமும், காயமடைந்த சரோன் குடும்பத்திற்கு ஒரு லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.