Breaking News
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய தேர்வுக் கட்டணம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கோரிக்கையை ஏற்று அது நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. அதன்படி, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு கொண்ட மாநில பணி தேர்வுகளுக்கான கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200 ஆகவும், சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

அதேபோல், எழுத்துத் தேர்வு மட்டும் கொண்ட பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும், முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு கட்டணம் (5 ஆண்டுகள் செல்லத்தக்கது) ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது.

இதுவரை பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்புகளைச் சேர்ந்த பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வினை 3 முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் எழுதலாம். இந்த கட்டணச் சலுகை பட்டப் படிப்பு கல்வித் தகுதியை பார்க்காமல் அனைத்து கல்வித் தகுதிகள் (எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2) கொண்ட இப்பிரிவினருக்கு நீட்டிக்கப்படும். திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கட்டணமும், கட்டணச் சலுகையும் கடந்த மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.