பழைய ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
பழைய ரூபாய் நோட்டுகளை, வாக்குறுதி அளித்தபடி டெபாசிட் செய்ய அனுமதிக்காதது தொடர்பான மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சரத் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அப்போது, இந்த நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று தெரிவித்தார்.
எனினும் இந்த காலக் கெடுவுக்குப் பிறகும் உரிய காரணங்களைக் கூறி, 2017 மார்ச் 31 வரை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யலாம் என்று மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிப்படி இப்போது பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வாக்குறுதி மீறல்
அதேநேரம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது (டிசம்பர் 30 வரை) வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் மட்டும் வரும் மார்ச் 31-க்குள் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதன்மூலம் பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர், இந்த மனு குறித்து வரும் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.