Breaking News
தமிழகம், புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்ச் 8) தொடங்குகிறது. இந்தத் தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 022 மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 8) தொடங்கி வரும் 30 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 022 மாணவர்கள் (தனித்தேர்வர்கள் உள்பட) எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 406 பேர், மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 792 பேர் ஆவர். இவர்களை தவிர 43 ஆயிரத்து 824 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். தமிழில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 721 ஆகும்.
பொதுத் தேர்வை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 664 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 25,280 பேர் மாணவர்கள், 26,384 பேர் மாணவிகள் ஆவர். இதற்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, புழல், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஆண்கள் 219 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 229 சிறைவாசிகள் தேர்வெழுதுகின்றனர் என்று தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

3,371 மையங்களில்…
தேர்வெழுதும் மாணவர்கள் 10,38,022
மாணவர்கள் 4,98,406
மாணவிகள் 4,95,792
புதுச்சேரி மாணவர்கள் 17,570
தனித்தேர்வர்கள் 43,824
மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 4,190
சிறைவாசிகள் 229
தேர்வு மையங்கள் 3,371
பறக்கும் படையினர் 6,403
தேர்வு நேரம் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.