தொப்பையை குறைக்க என்ன வழி?
ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை… அதில் தொப்பை பெரிய பிரச்னை. உடல் எடை பற்றி எந்த கவலையும் படாமல் ஜாலியாக சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்கி, வயிறு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகும் போதெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், நிறைமாத கர்ப்பிணிபோல் வயிறு ஆனவுடனே ‘அய்யய்யோ’ என்று அலர்ட்டாவதுதான் பல ஆண்களின் பாலிசி அதன்பிறகு வாக்கிங் ஜாக்கிங்கிலேயே தொப்பையைக் குறைத்துவிடலாம் என்றோ, ஜிம்முக்குப் போனால் சரியாகி விடும் என்றோபடாதபாடுபாடுவதையும் பார்க்கிறோம். உடற்பயிற்சியின் மூலம் தொப்பையைக் குறைப்பது
எத்தனை சதவிகிதம் சாத்தியம்? உடற்பயிற்சி நிபுணர் ராமமூர்த்திக்கு இந்த கேள்வி.
‘‘உணவின் மூலம் உடலில் அதிகமாக சேர்கிற கொழுப்பு, முதலில் வயிற்றுப்பகுதியில்தான் சென்று படியும். அதனால்தான் தொப்பை வருகிறது. இந்த தொப்பையைக் குறைப்பதில் உடற்பயிற்சிக்கு 20 சதவிகிதம்தான் பங்கு இருக்கிறது. மீதி 80 சதவிகிதத்தைத் தீர்மானிப்பது உங்கள் உணவுப்பழக்கம்தான்.அதனால், தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தால் மட்டும் போதாது. முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் அதற்குப் பதிலாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம்.
காலை உணவாக எண்ணெய் சேர்க்காத 3 சப்பாத்தி அல்லது உலர்ந்த பழங்கள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட ஓட்ஸ் ஒரு கப் சாப்பிடலாம். மதிய உணவுக்கு ஒரு கப் சாதம், கீரை அல்லது காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். அசைவத்தை விரும்புகிறவர்கள் எண்ணெய் சேர்க்காத மீன் அல்லது கோழி இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம். இரவு உணவாக, எண்ணெய் இல்லாத சப்பாத்தி 3 உடன் ஃப்ரூட் சாலட் ஒரு கப் சாப்பிடலாம். பால் குடிப்பதாக இருந்தால் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் குடிக்கலாம். இந்த உணவுக்கட்டுப்பாட்டுடன் ஃபிட்னஸ் டிரெயினர் அறிவுரைப்படி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். 45 நிமிடம் நடைப்பயிற்சியும், அதன்பிறகு, 45 நிமிடம் வொர்க்-அவுட்டும் செய்ய வேண்டும். வார்ம்-அப் செய்த பிறகுதான் வொர்க்-அவுட் ஆரம்பிக்க வேண்டும். வொர்க்-அவுட்டில் Floor Exercise, Leg Extension, Obliques (4 கிலோ எடையுள்ள தம்புல்ஸ் 2 கையிலும் வைத்தவாறு உடலை வலது, இடது பக்கமாக வளைத்தல்) போன்றவற்றை செய்ய வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இந்த இரண்டும் ஒன்று சேரும்போது தான் தொப்பையைக் குறைப்பது சாத்தியமாகும்’’ என்கிறார்.