மொபைல் பேங்கிங்… வங்கிக்கணக்குடன் ஆதார் எண் மார்ச் 31க்குள் அவசியம்- நிதி அமைச்சகம் ஆர்டர்
நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இம்மாத இறுதிக்குள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு
அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் திரும்ப பெறப்பட்டன. இதனால் பணப்பஞ்சம் ஏற்பட்டது. உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ‘பீம் ஆப்’ என ஒரு ஆப்ஸ் உருவாக்கப்பட்டது.
மொபைல் பேங்கிங்
இதன் ஒரு பகுதியாக அனைத்து வங்கிகளும் மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை
இந்த நடவடிக்கையானது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அத்துடன் பணபரிமாற்றங்கள் விரைவாக நடக்கும். ஆன்லைன் பரிமாற்றத்திற்கு ஏராளமான புதிய
வாடிக்கையாளர்கள் உருவாவதற்கும் வழி ஏற்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆதார் எண்கள் இணைப்பு
தற்போது உள்ள நிலவரத்தின் படி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் 65 சதவீதம் பேரின் மொபைல் எண்கள் வங்கிகள் வசம் உள்ளது. இதில் 50 சதவீதம் மட்டுமே ஆதார் எண்ணுடன்
இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மொபைல் சேவை 65 சதவிகிதம் உள்ள போதிலும் இதில் 20 சதவீத கணக்குகளே மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளன. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் வங்கி யில் உள்ள சேமிப்புக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வங்கிகள் இம்மாதம் 31ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பணபரிவர்த்தனை
யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ மற்றும் பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி எனப்படும் பீம் உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலியைப் பயன்படுத்துவதும் மொபைல்
வங்கிச் சேவை தான் என்று தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் கூறியுள்ளார். இத்தகைய சேவையைப் பயன் படுத்தும் வாடிக்கையாளர் களுக்கு மொபைல் வங்கிச் சேவை கிடைப்பதற்கான நடவடிக்கையை இம்மாத இறுதிக்குள் எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதாக அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.