முதல்வர் மகனின் சொந்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரிப்பு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன், நரலோகேஷின் சொத்து மதிப்பு, ஐந்துமாதங்களில், 23 மடங்கு அதிகரித்து, 330 கோடி ரூபாயாகி உள்ளது.
வேட்பு மனு தாக்கல்:
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலராக, அவர் மகன், நரலோகேஷ், 34, உள்ளார். ஆந்திர சட்ட மேல்சபை தேர்தலுக்கு, நேற்று முன்தினம், லோகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், லோகேஷின் சொத்து மதிப்பு, 330 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன், அவர் அறிவித்திருந்த சொத்து மதிப்பைவிட, இது, 23 மடங்கு அதிகம்.
கடந்தாண்டு எவ்வளவு? :
கடந்த ஆண்டு, அக்டோபரில், வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், தன் சொத்து பற்றிய அறிவிப்பை, லோகேஷ் வெளியிட்டார். அதில், 14.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே தனக்கு இருப்பதாக, லோகேஷ் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிவிப்பில், 6.35 கோடி ரூபாய் கடன் இருப்பதாக, அவர் கூறியிருந்தார்.