டிஜிட்டல் பணபரிமாற்ற பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க புதிய வரைவு வழிகாட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு மக்கள் மத்தியில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் மக்களிடம் இம்முறையில் உள்ள பாதுகாப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
இந்த குழப்பங்களை நீக்கும் வகையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மொபைல் வாலெட்ஸ், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பற்று கணக்குகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரைவு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பிற்கான பரிவர்த்தனைக்கான அடித்தளத்தை மேம்படுத்தவே இந்த புதிய வரைவு வழிகாட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைவுகள்
கடந்த 2000ம் ஆண்டில் பற்று பரிவர்த்தனை கருவிகளுக்கான அமைக்கப்பட்ட வரைவுடன் கூடுதலாக கீழ்கண்ட புதிய வரைவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
1. டிஜிட்டல் முறையில் பற்று கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்படும் போது அளிக்கப்படும் தகவல்கள் திருட முடியாத படியும், திருடப்பட்டாலும் தகவல்களை பெற முடியாத படியும் என்கிரிப்ட் செய்யப்பட வேண்டும்.
2. பணபரிவர்த்தனையை செய்யும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சுலப மொழியில் புரியும் படியாகவும் நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
3. பணபரிவர்த்தனை தொடர்பாக வரும் புகார்களுக்கு 36 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் அந்த புகாருக்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டி மீது வரும் மார்ச் 20 வரை கருத்து கூறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.