Breaking News
வங்கி கணக்கில் இருப்பு குறைவுக்கு அபராதம்: எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை?

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு:

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்., 1 முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும்.

அபராதம்:

பெருநகரை பொறுத்தவரை, இந்த மாதாந்திர இருப்பில், 75 மற்றும் 50 சதவீதம் குறைந்தால், முறையே, 100 மற்றும் 50 ரூபாய் அபராதத்துடன், சேவை வரியும் வசூலிக்கப்படும். இத்தொகை, பிற இடங்களுக்கு மாறுபடும் என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுமாறு, எஸ்.பி.ஐ.,க்கு, மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

மறுபரிசீலனை:

இதை மறுத்துள்ள, எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ‘மத்திய அரசிடம் இருந்து, அதிகார பூர்வ தகவல் ஏதும் வரவில்லை; அப்படி வந்தால், அது குறித்து வங்கி பரிசீலிக்கும்’ என, தெரிவித்துள்ளார்.அதனால், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.