5 மாநில வாக்கு எண்ணிக்கை காலை துவங்கியது: உ.பி உத்தராகண்டில் பாஜக முன்னிலை
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. உ.பி உத்தாரகண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதன் இறுதி முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் மட்டும் வெளியாகத்துவங்கி உள்ளது. இதில், உபியின் 403 தொகுதிகளில் 169 இடங்களின் முன்னிலை வெளியாகி உள்ளது. பாஜக 123 என முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது. இது 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்கட்சியான பகுஜன் சமாஜ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 8 லும் முன்னிலை பெறுள்ளன.
நேற்று முன் தினம் உபி மாநிலத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில், பாஜகவிற்கு இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியாவில் 251-279 மற்றும் நியூஸ் 24-சாணக்கியாவில் 285 இடங்களாக தனிமெஜாரிட்டி கிடைக்கும் எனக் கணித்திருந்தன. மற்ற அனைத்து கணிப்புகளும் பாஜகவிற்கு முதலிடம் அளித்ததுடன், உபியில் தொங்குசபை வரும் எனக் குறிப்பிட்டிருந்தன. ஆனால், அனைத்து கணிப்புகளுமே சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டாவது இடமும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு மூன்றாவது இடமும் அளித்திருந்தன.
உத்தராகண்டின் 70 தொகுதிகளின் 20-ன் முன்னிலை வெலியாகி உள்ளன. பாஜக முதலிடமாக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகளில் பகுஜன் ச்மாஜுக்கு மட்டும் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை தெரிகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் 15 பெற்று முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆளும் பாஜக-அகாலிதளம் கூட்டணிக்கு 4 இடங்களும், முதன்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் தெரிகிறது. பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன.
கோவாவின் 40 தொகுதிகளில் பாஜக ஒன்றிலும், இதர கட்சிகள் ஒன்றிலும் முன்னிலை வகிக்கின்றன. மணிப்பூரின் 60 தொகுதிகளில் காங்கிரஸ் 3, பாஜக 1 மற்றும் இதர கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.