Breaking News
ரூ.8 கோடிக்கு போன் நம்பரை ஏலத்தில் எடுத்த துபாய் வாழ் இந்தியர்

மொபைல் போன் விலை என்னவோ சில ஆயிரங்கள் தான்; ஆனால், அதன் பேன்சி எண்ணுக்கு கோடிகளில் ஏலம் நடக்கிறது; இதோ துபாயில் உள்ள இந்தியர் ஒருவர், ரூ.8 கோடிக்கு அப்படி ஒரு பேன்சி மொபைல் எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் பல்விந்தர் சஹானி. துபாயில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993ம் ஆண்டு குவைத்தில் ஆர்எஸ்ஜி சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர கார் டயர், உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் இந்தியா, அரபு நாடுகளில் நடத்தி வருகிறார். கார் மற்றும் செல்போன் நம்பர்களுக்கு ஏலம் நடந்தால் இவர் பங்கேற்காமல் இருக்க மாட்டார். அதுவும் இவருக்கு ராசியான 5 அல்லது 9 என்றால் விட மாட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துபாயில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்திய செல்போன் பேன்சி நம்பர் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு விருப்பமான 0588888888 என்ற செல்போன் நம்பரை 4.5 மில்லியன் திர்காம் பணத்திற்கு பல்விந்தர் சஹானி ஏலத்தில் எடுத்தார். இதன் நம்மூர் மதிப்பு 8 கோடியே 16 லட்சத்துக்கு 49 ஆயிரத்து 21 ரூபாய்.

ஸ்மார்ட் பிளாட்டினம் என்ற திட்டத்தின் அந்த தொலை தொடர்பு நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் மொத்த 50 பேன்சி நம்பர்கள் ஏலம் விடப்பட்டன. இந்த 50 செல்போன் நம்பர்களில் பல்விந்தர் சஹானி ஏலத்தில் எடுத்த செல்போன் நம்பர் தான் அதிகபட்சமாக ரூ.8 கோடிக்கு ஏலம் போனது. மற்ற 49 போன் நம்பர்களுடன் சேர்ந்து மொத்தம் 13 கோடியே 42 லட்சத்து 67,279 ரூபாய்க்கு ஏலம் போனது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விமான நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்த பல்விந்தருக்கு விமானத்தில் பறக்க சிறப்பு சலுகை வழங்குவதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதியும் இவர் பெயர் தலைப்பு செய்தியாக இடம் பிடித்தது. அதற்கு காரணம் இவர் வாங்கிய கார் நம்பர் தான். அப்போது தனக்கு விருப்பமான மற்றும் ராசியான டி-5 என்ற நம்பரை சுமார் 59 கோடி ரூபாய் கொடுத்து துபாய் மண்டல போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து ஏலத்தில் எடுத்தார். இந்த கார் தான் அவரது விருப்பமான ரோல்ஸ் ராய்ஸ் காரின் பதிவு எண்ணாக உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.