12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறைகிறது நீர்மட்டம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 29.95 அடியாக குறைந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 30 அடிக்கும் கீழாக நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் தட்டுப்பாடு அபாயம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், அணையை நம்பியுள்ள சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதேபோல காவிரி கரையோர மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
தற்போது பல மாவட்டங்களில் வாரத்திற்கு ஒருமுறை அல்லத 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர் குறைந்து வருவதால் இனி 2 வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.