பிரட்டும், கேக்கும் வாங்க இனி ஜெயிலுக்கு போங்க!
துரை மத்திய சிறையில், தண்டனை கைதிகளால், தயாரிக்கப்படும், பிரட், கேக் ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் விற்க, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சிறையில், 1,500 கைதிகள் உள்ளனர். இதில், 600க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இவர்கள் தண்டனை முடித்து வெளியில் சென்று, சுய தொழில் புரியும் வகையில், பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதில் அவர்களுக்கு, கணிசமான தொகை மாத வருவாயாக கிடைக்கிறது. சிறையில் அலுவலக கவர்கள், மழை கோட், இனிப்பு வகைகள், உற்பத்தி செய்யப்பட்டு, அரசு நிறுவனங்கள் மற்றும், ‘பிரிசன் பஜார்’ மூலம் விற்கப்படுகிறது.
இந்நிலையில் பேக்கிரி யுனிட் அமைத்து பிரட், கேக் தயாரித்து, அரசு மருத்துவமனை மற்றும் வெளிமார்க்கெட்டில் விற்க, ஜெயில் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேக்கிரி யுனிட் அமைக்க, 20 லட்சம் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், அரசிடம் கேட்டுள்ளோம். நிதி பெற்றதும் பணி துவங்கும். இது தவிர, பெண்கள் சிறைச்சாலையில், பெண் கைதிகளால், பல் பொடி தயாரிக்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம், புரசடை உடைப்பில், 100 ஏக்கரில், திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. இங்கு, 10 கைதிகள் மட்டுமே உள்ளனர். இவர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி சாகுபடி செய்கின்றனர்.
சிறை கட்டடம் நீங்கலாக, 84 ஏக்கர் உள்ளது. இதில் சிறிய பரப்பில் மட்டும், கீரை மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. மற்ற நிலங்களிலும், கரும்பு, மா, தென்னை போன்றவை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.